தமிழகம்

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: மாவட்ட செயலாளர்களிடம் மனம் திறந்த விஜயகாந்த்

செய்திப்பிரிவு

‘திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார்.

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:

விஜயகாந்த் மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து 14 மாவட்ட செயலாளர்கள் பெயரில் வெளியான கடிதம் தொடர்பாக அந்த மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் போது 14 மாவட்ட செயலாளர்களும் கடிதத்தை நாங்கள் எழுதவில்லை என்று கூறினர். இதையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு, தேமுதிக வழக்கறிஞரணித் தலைவருக்கு விஜயகாந்த் அறிவுறுத்தினார்.

மாவட்ட செயலாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேமுதிகவை அழிக்க பலரும் துடிக்கின்றனர். மாவட்ட செயலாளர்கள் அதற்கு வழிவகுத்திட கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவு கிடையாது. இனிமேல் எப்போதும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள் என்று கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT