தமிழகத்தில், அரசு மருத்துவமனைப் பணிகளை, அவுட்சோர்சிங் மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்பட்ட, 126 பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் தங்கள் பணியைத் தொடங்கினர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.
இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், பல்நோக்கு பணியாளர்கள், பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர்களை நியமித்து பராமரிக்க, ஹைதராபாத்தை சேர்ந்த, 'பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு, மாநில சுகாதார மேம்பாட்டுத் திட்ட இயக்குநரகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ. 6,000, பாதுகாவலர்களுக்கு ரூ. 5,300, பல்நோக்குப் பணியாளர்களுக்கு ரூ. 4,300 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 169 பல்நோக்கு பணியாளர்கள், 44 பாதுகாவலர்கள், 15 மேற்பார்வையாளர்கள் தேவை என கேட்கப்பட்டது.
தற்போது, 24 ஆண்கள், 75 பெண்கள் என 99 பல்நோக்கு பணியாளர்கள், 13 பாதுகாவலர்கள், 14 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை முதல் தங்கள் பணிகளைத் தொடங்கினர். பணிகளை, மருத்துவக் கல்லூரி முதல்வர் அ. எட்வின் ஜோ, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்தினம், உறைவிட மருத்துவ அலுவலர் ஜே. சைலஸ் ஜெபமணி பார்வையிட்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை 20 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 50 மருத்துவ பணியாளர்கள் வழக்கமான பணியாளர்களாக ஏற்கனவே பணிபுரிகின்றனர். இவர்கள் மருத்துவமனையின் 30 சதவீத பணிகளை செய்வர். மீதமுள்ள 70 சதவீத பணிகளை அவுட்சோர்சிங் மூலம் வந்துள்ளவர்கள் செய்வர். இதன் மூலம் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பதுடன், நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிரமமின்றி செய்ய முடியும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என். வெங்கடேசன் கூறுகையில், மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமம்.
அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்படும் பணியாளர்களிடம் பொறுப்பு ணர்வு, பணியில் ஈடுபாடு போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. மருத்துவமனை என்பது உயிர் காக்கும் இடம். அவுட்சோர்சிங் மூலம் குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மருத்துவப் பணிகள், கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் இந்த அவுட்சோர்சிங் முறை. இதனை கைவிட வேண்டும் என்றார்.