சிறையில் காவலர்கள் தன்னைத் தாக்கியதாக இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தெரிவித்தார்.
சேலத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியைத் தடுத்ததாக இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் உள்ளிட்ட 3 பேரை கடந்த 8-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதில், பியூஷ் மானுஷ் தவிர மற்ற 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் பியூஷ் மானுஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 13 நாட்கள் சிறையில் இருந்த பியூஸ் மானுஷ், நேற்று சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கைதாகி சிறைக்குள் சென்றதும், ‘தேசியக்கொடியை ஏன் எரித்தாய்?’ என்று கேட்டுக்கொண்டே சிறைத்துறை எஸ்பி என்னை அடித்தார். பின்னர் ஏராளமான காவலர்கள் என்னை சுற்றி வளைத்து தாக்கினர். நான் தேசியக்கொடியை எரித்ததாக பலரும் குற்றம்சாட்டினர்.
நான் முகநூலில் அதிகாரி களைப் பற்றி கடுமையாக விமர் சனம் செய்திருந்தேன். அதை உணர்ந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி சிறை எஸ்பியிடம் கொடுத்தேன். அதன் பின்னரும் என் மீது தாக் குதல் நடந்தது. நான் தாக்கப் பட்டது அனைத்தும் சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
என்னைத் தாக்கியவர்கள் மீது எனக்கு துளியும் கோபம் இல்லை. ஆனால், நான் தாக்கப்பட்டதற்கு யார் காரணம்? என்பது எனக்குத் தெரிய வேண்டும். நான் சேலத்தின் மண்ணைக் காப்பாற்ற, நிலத்தடி நீரை காப்பாற்ற, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற சேலத்துக்காக உயிரை கொடுத்து உழைத்தேன். அதற்கு இதுதான் பரிசா?. நான் குற்றவாளி என நிரூபித்தால், குடும்பத்தோடு சேலத்தை விட்டு சென்றுவிடுகிறேன்.
எனக்கு நேர்ந்த அவமானம், தாக்குதல் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன். உண்மையான முறையில் விசாரணை நடத்தினால், சிறைக்குள் நடந்த அனைத்து சம்பவங்களும் வெளிவரும். நான் மரம் நடுவேன், சுற்றுச்சூழலைக் காப்பேன். என் உயிர் உள்ளவரை இப்பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.