‘அகரம்’ அறக்கட்டளை, ‘புதிய தலைமுறை’ மற்றும் ‘தி இந்து’ இணைந்து நடத்தும் ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சிகளின் அடுத்த கட்டமாக, ஆவடியை பசுமையாக்கும் நோக்கத்தில் ‘பசுமை ஆவடி’ திட்டம் ஆவடி தொகுதியில் நேற்று தொடங்கியது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்துக்குப் பின்பு ‘யாதும் ஊரே’ சார்பில் சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து வந்திருந்த துறை சார் நிபுணர்கள் வெள்ளத் தடுப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். தொடர்ந்து சீரழிந்துக் கிடக்கும் நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பாகவும் நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்ட நகர்வாக தற்போது ஆவடி தொகுதியை பசுமையாக்கும் திட்டம் மற்றும் ஆவடியின் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘அகரம்’ அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ கூறும்போது, “ஏரிகள் போன்ற நீர் நிலைகளை சீரமைக்க வேண்டும் என்றால் அரசின் ஒத்துழைப்பு தேவை. இதுகுறித்து ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜனிடம் ஆலோசித்தோம். அவர் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார்.
எனவே, அரசு உதவியுடன் ஆவடியில் உள்ள ஏரியை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது ஏரியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஏரியை சீரமைக்கும் பணிக்கான தொடக்க விழா வரும் 14-ம் தேதி நடக்கிறது” என்றார்.
இது தவிர ‘பசுமை ஆவடி’ திட்டத்தின் கீழ் நேற்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்கும். முதல்கட்டமாக ஆவடி பேருந்து நிலையத்தை சீரமைத்து, பச்சை வண்ணம் அடிப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் ஓவியங்களை வரைவது போன்ற பணிகள் தொடங்கியிருக்கின்றன.
ஆவடி தொகுதி முழுவதும் சாத்தியம் உள்ள பகுதிகளிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பாரம்பரிய கலைக் குழுக்கள் மூலம் மக்கள் கூடும் இடங்களில் சுற்றுச்சூழலை, நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. ஆவடி தொகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்ட பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. வரும் 14-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆவடியில் நடக்கவிருக்கும் தொடக்க விழாவில் நடிகர் சூர்யா, மாஃபா பாண்டியராஜன், உள்ளூர் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள், மற்றும் ‘யாதும் ஊரே’திட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.