பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகத்தை வளமாக்கும் காவிரி நீர் தேக்கி வைக்கப்படும் மேட்டூர் அணை 140 ஆண்டுகளுக்கு பின்னர் வறண்ட பூமியாக மாறியுள்ளது. இதனால், பாசனத்துக்கும், குடிநீருக்கும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் தலைகாவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் உற்பத்தியாகும் காவிரியாறு கர்நாடக மாநிலத்தில் 320 கிமீ ஓடி தமிழகத்தை வளமாக்க கிருஷ்ணகிரி மாவட்டம் பிலுகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவியாக பெருக்கெடுத்து ஓடி மேட்டூர் அணையில் சமுத்திரமாய் தேக்கப்படுகிறது. பின்னர், தமிழக டெல்டா மாவட்ட பாசனத்தேவை மற்றும் சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட காவிரி படுகை பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
தமிழகத்தில் 416 கிமீட்டரும், தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் 64 கிமீ காவிரி பாய்ந்து வருகிறது. குடகு மலையில் சிறு ஓடையாக பெருக்கெடுக்கும் காவிரி தமிழகத்தில் அகன்ற காவிரியாக உருவெடுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஹாசன், மசைூர், மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக் கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை கைக்கொடுத்த காலங்களில் காவிரி ஆற்றில் இருந்து ஆண்டுக்கு 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது. காவிரி ஆற்று நீரை சேமிக்க மேட்டூரில் இரண்டு மலைக்கு நடுவே 5,300 அடி நீளத்தில் ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தை ஆங்கிலேயர்கள் கட்டினர்.
கடந்த 1925-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி தொடங்கப்பட்ட மேட்டூர் அணை கட்டுமான பணி, கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முடிக்கப்பட்டது. மொத்தம் 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 120 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும்.
மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியாக 59.25 சதுர மைல் நீளம் கொண்டுள்ளது. மேட்டூர் அணையில் 93.47 டிஎம்சி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. கடும் வறட்சி காரணமாக தற்போது, அகன்ற காவிரியில் ஓடையாக வெறும் 26 கனஅடி தண்ணீரே மேட்டூர் அணைக்கு வருகிறது. 24.84 அடி நீர் மட்டமும், 5.62 டிஎம்சி கொள்ளளவு உள்ளது. குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணை, வறட்சியில் வறண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட மேட்டூர் அணை நீர் இருப்பு கைக்கொடுக்குமா? என்பதும் கேள்வி குறியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் முன்னாள் தலைமை பொறியாளர் சி.சிவபிரகாசம் கூறியதாவது:
மேட்டூர் அணை வறட்சிக்கு முக்கிய காரணம் இயற்கையின் பாராமுகமே எனலாம். கடந்த 140 ஆண்டுக்கு பின்னர் மேட்டூர் அணை கடும் வறட்சியை சந்தித்துள்ளது. பருவ மழை பொய்த்ததால் காவிரி ஆற்றுப்படுகை, வெறும் மணல் படுகையாக மாறிவிட்டது. காவிரி ஆற்றுப்படுகை கடல் மட்டத்தில் இருந்து 625 அடி உயரத்தில் உள்ளது.
இதில், பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வெளியேறும் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 670 அடி உயரத்தில் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேறும் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 790 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேட்டூர் அணை கட்டுமானத்துக்கான அஸ்திவாரப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 580 அடி உயரம் கொண்டுள்ளது.
மேட்டூர் அணையின் மைய பகுதி 1,300 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிக தண்ணீரை தேக்கி வைக்க கூடிய சிறப்பு பெற்ற அணையாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது.
மேட்டூர் அணை தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டத்தில் 16 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வந்தது, பருவமழை பொய்த்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை வளத்தை மனிதர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டார்களோ; அன்றே இயற்கையும் தனது சீற்றத்தை அரங்கேற்ற ஆரம்பித்து விட்டது எனலாம். வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கான கடும் வறட்சியான சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையில் தமிழக அரசு அக்கறை செலுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்தபடம் : வறண்டு காணப்படும் நீர்த்தேக்கப்பகுதியான பண்ணவாடி.
டிஎம்சி குறியீட்டை அறிவோம்
முன்னாள் தலைமை பொறியாளர் சி.சிவபிரகாசம் கூறும்போது, ‘‘மேட்டூர் அணையில் தண்ணீரின் அளவை டிஎம்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது பலரும் அறிந்திருப்பதில்லை. ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம், ஒரு அடிநீளம் கொண்ட கேனில் தண்ணீர் நிரப்பினால், அது ஒரு கனஅடி ஆகும். இவ்வாறு பத்து லட்சம் கனஅடி கொண்ட தண்ணீரின் அளவு, ஒரு மில்லியன் கனஅடி ஆகும்.
ஆயிரம் மில்லியன் கன அடி (தவுசண்ட் மில்லியன் கியூபிக் ஃபீட்) ஒரு டிஎம்சி என குறிப்பிடப்படுகிறது. மேட்டூர் அணையில் 93470 மில்லியன் கனஅடி அல்லது 93.47 டிஎம்சி தண்ணீர் தேங்கும் கொள்ளளவை கொண்டுள்ளது’’ என்றார்.