அமெரிக்க ஆயுத கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேரின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உலா வந்த அமெரிக்காவின் தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இம்மாதம் 12-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டது.
35 பேர் கைது
இக்கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கப்பலுக்கு சட்டவிரோதமாக டீசல் வழங்கிய தூத்துக்குடியை சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில், இங்கிலாந்து நாட்டவர் ஒருவர், இந்தியர்கள் 2 பேர் ஆகிய மூவரை கியூ பிரிவு போலீஸார் தங்கள் காவலில் எடுத்து 5 நாள்கள் விசாரித்தனர்.
ஜாமீன் மனு
இந்நிலையில் கப்பலில் கைது செய்யப்பட்ட 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் சார்பில் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) பால்துரை முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
காரசார விவாதம்
இதையடுத்து ஜாமீன் மனு, புதன்கிழமை காலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) பால்துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் அன்சுமான் திவாரி, தூத்துக்குடி வழக்குரைஞர்கள் ஜவஹர், செல்வின் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அமெரிக்க கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் வரவில்லை. சர்வதேச கடல் எல்லையில் தான் நின்றது. இந்திய கடலோர காவல் படையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே அக்கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் வந்தது. மேலும், கடல் கொள்ளை தடுப்பு கப்பல் என்பதால் அதில் ஆயுதங்கள் வைத்திருப்பதில் தவறில்லை என அவர்கள் வாதிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்திரசேகர், இந்த கப்பல் கடந்த 9.9.2013 முதல் இந்திய கடல் எல்லைக்குள் இருந்துள்ளது. எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பதற்கான காரணத்தை முறையாக தெரிவிக்கவில்லை. மேலும், ஆயுதங்கள் வைத்திருந்தற்கான ஆவணங்களும் முறையாக இல்லை. இந்த வழக்கை டீசல் கடத்தல், ஆயுத வழக்காக மட்டுமே பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். விசாரணையின் போது எஸ்தோனியா நாட்டின் தூதர் மார்க்கஸ் சார்க்லிப் நீதிமன்றத்திற்கு வந்திருந்து நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
தொடர்ந்து மாலையில் மனு மீதான உத்தரவை நீதிபதி பால்துரை பிறப்பித்தார். அதில், வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனு மீது எந்த முடிவுக்கும் வரவில்லை. மேலும், கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை. எனவே, 35 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
காவல் நீட்டிக்கப்படும்
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பேரது நீதிமன்ற காவலும் வியாழக்கிழமை (அக்டோபர் 31)யுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர்களது காவல் நீட்டிக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.