தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை நீடித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் சூழந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கன மழை எச்சரிக்கை
லட்சத்தீவு அருகே நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும்.
குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே சனிக்கிழமை கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி லட்சத்தீவுக்கும் கேரள எல்லைக்கும் இடையே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறையில் சனிக்கிழமை 22 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று இரவும் இன்று காலையும் பரவலாக மழை வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையார், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.