தமிழகம்

2021-ல் 20, இப்போது 27... அதிமுக கூட்டணியில் பாஜகவின் ‘தொகுதி வியூகம்’ பின்புலம் என்ன?

வீரமணி சுந்தரசோழன்

அதிமுக கூட்டணியில் மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கனவோடு இருந்த பாஜகவுக்கு 27 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் 27 தொகுதிகள் குறைவானது என்றாலும், மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் பெற்ற 20 தொகுதிகளை விடவும் கூடுதலாக தொகுதிகளையே பெற்றுள்ளது பாஜக.

1996-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, 2001-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களை கைப்பற்றியது. அதன் பின்னர் வந்த அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு சுமார் 2 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்று வந்தது பாஜக. ஆனால் ஒரு முறைகூட அக்கட்சியால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.

இந்தச் சூழலில், 2021-ஆம் ஆண்டு அதிமுக அணியில் இடம்பெற்ற பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவையில் மீண்டும் நுழைந்தது. அந்த தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

          

2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர், அனைத்து மாநிலங்களிலும் பாஜக கொடி பறக்க ஆரம்பித்தது. அதுவரை கால் பதிக்காத மாநிலங்களில் கூட, கோலோச்சி ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு பாஜக உயரத் தொடங்கியது. அதே வேகத்தில் தமிழகத்திலும் பாஜகவை பலம்பெற செய்ய தேசிய தலைமை பல வியூகங்களை வகுத்து வருகிறது.

2021-ல் மாநில தலைவரான அண்ணாமலை, தமிழக பாஜகவுக்கு புதிய எழுச்சியை உருவாக்கினார் என அக்கட்சியினராலேயே சொல்லப்பட்டது. அதன்பின்னர் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக அல்லாத தனி அணி அமைத்து களம் கண்ட பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. தனியாக பாஜக 11 சதவீத வாக்கினையும் பெற்றது. இதில் ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ் போன்றோர் பாஜக சின்னத்தில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தலில் பெற்ற அதிகளவிலான வாக்குகள் தந்த தெம்போடு, அதிமுகவை கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவந்தது பாஜக. அதுமட்டுமின்றி ஆரம்பம் முதலே அதிமுக கூட்டணியில் 50+ இடங்களை பாஜக பெறும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளாததால், மாவட்டத்துக்கு ஒன்று என 39 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துப் பார்த்தது. அதற்கும் பழனிசாமி ஓகே சொல்லாததால், 30 தொகுதிகளுக்கு இறங்கி, கடைசியாக 27 தொகுதிகளை உறுதி செய்துள்ளது பாஜக.

பாஜகவின் 27 சீட்டுகள் - ஓர் பார்வை:

மாவட்டத்துக்கு ஒரு தொகுதி கேட்ட பாஜகவுக்கு 27 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பார்வை இருந்தாலும், கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் மட்டுமே பெற்ற பாஜக இம்முறை 27 தொகுதிகளைப் பெற்றுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதிக சீட்டுகள் கேட்டு அதிமுகவுக்கு, பாஜக நெருக்கடி கொடுக்கிறது என பேச்சுகள் எழுந்தாலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை நீக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக தொடக்கம் முதலே எல்லா விஷயத்திலும் பாஜக அனுசரித்தே சென்றது. அதனால்தான் தொடக்கத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டாலும், பின்னர் படிப்படியாக இறங்கிவந்து 27-க்கு பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர். மேலும், தன்னால் கூட்டணிக்குள் கொண்டுவரப்பட்ட தினகரன் போன்றவர்களுக்கும் தொகுதிகளை பெற்றுத் தரவும் முனைப்பு காட்டியது.

இன்னொரு பக்கம், பாஜக தொடக்கத்தில் ‘பேக்கேஜ் திட்டம்’ குறித்து பேசியது. அதாவது அதிமுகவுக்கு போக, மொத்தமாக மீதமுள்ள தொகுதிகளைப் பெற்றுக்கொள்வது. அதன்பின்னர் பாஜக, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளைப் பகிர்ந்து கொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இது இரட்டை அதிகார மையமாக மாறும் என்பதுடன், தனது முக்கியத்துவமும் குறைந்துபோகும் எனவும் நினைத்தது அதிமுக. அதனால், பாஜகவின் ‘பேக்கேஜ்’ திட்டத்தை நிராகரித்த அதிமுக, தனது தலைமையிலேயே தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

பாஜக இப்போது பெற்றுள்ள 27 தொகுதிகளில், தங்களுக்கு மிகவும் வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெற உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், சுமார் 20 நட்சத்திர வேட்பாளர்கள் பாஜக தரப்பில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, எப்படியாவது 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றும் தமிழக பாஜகவுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளது டெல்லி தலைமை.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிபெற, பல சக்கர வியூகங்களையும் வகுப்பது பாஜகவின் வழக்கம். தமிழகத்தில் வெற்றிபெற பாஜக கையிலெடுக்கப் போகும் வியூகம் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT