சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025–26-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019-ன் படி (முன்பு திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015) மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என 20 சதவீதம் வரை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என 20 சதவீதம் வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும். இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர்.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு ரூ.367.20 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.