தமிழகம்

சென்னையில் ஒரே மாதத்தில் 2 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஒரே மாதத்தில் 2 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு மருத்துவ முகாம், கொசு ஒழிப்புப் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மருந்துகளை இருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், டெங்கு பரவல் கட்டுக்குள் வரவில்லை.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 50 நபர்களுக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால், நேற்று சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT