*
திமுக, விசிக இடையேயான உறவை புதுப்பிக்கும் முயற்சியாக விசிக தலைவர் திருமாவளவனை பேராயர் எஸ்றா சற்குணம் சென்னையில் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
2006 சட்டப்பேரவை தேர்தல் முதல் சுமார் 8 ஆண்டு காலத்துக்கு திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. கடந்த மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது, விசிகவை திமுக நடத்திய விதம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், திமுக ஆதரவாளரும் கருணாநிதிக்கு நெருக்கமானவருமான பேராயர் எஸ்றா சற்குணம், விசிக தலைவர் திருமாவளவனை சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் சமீபத்தில் சந்தித்து, திமுக கூட்டணியில் விசிக இணைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி எஸ்றா சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘திருமாவளவனுக்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வேன். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்தேன். மதவாத சக்திகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது என் கருத்து. அந்த வகையில்தான் திமுகவை ஆதரிக்கிறேன். திமுக கூட்டணியில் விசிக இணைய வேண்டும் என்ற எனது எண்ணத்தை அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் உறுதியாக எதையும் சொல்லவில்லை’’ என்றார்.
இந்த சந்திப்பு குறித்து விசிக வட்டாரத்தில் கேட்டபோது, “திமுகவுடன் கடந்த காலங்களில் நிறைய கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்பட்டன. எனினும், திமுக தலைவர் கருணாநிதிக் காகவே அந்த கூட்டணியில் தொடர்ந்தோம். பல ஆண்டுகளாக அந்த கூட்டணியில் இருந்தும் போதிய தொகுதிகளை பெற முடியாததால் தேர்தல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக எங்களால் உருவெடுக்க முடியவில்லை. கூட்டணி ஆட்சிக் கோட்பாட்டை ஏற்கும் கட்சியுடன்தான் கூட் டணி என்றோம். அப்போதே அதை திமுக தரப்பு மறுத்தது. அதன்பிறகுதான் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளோம். இனி, நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை. திமுகதான் சொல்ல வேண்டும். இதைத்தான் எஸ்றா சற்குணத்திடம் திருமா வளவன் கூறியுள்ளார்’’ என்றனர்.