பொன்னேரி கிளை சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததைக் கண்டித்து, சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆத்தூர் கிராமத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில், கடந்த 6-ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது, இளம் பெண் ஒருவரை கிண்டல் செய்ததாக, கூலி தொழிலாளி செல்வம்(42), முரளி, கணபதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க, பொன்னேரி நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 3 பேரையும், பொன்னேரி கிளை சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது, செல்வம், திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே முரளி, கணபதி ஆகிய இருவரும் பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தகவலறிந்த செல்வத்தின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்பி சாம்சன் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில், ஆத்தூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் காரனோடையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சில கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சார் ஆட்சியர் தண்டபாணி, எஸ்பி சாம்சன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘செல்வத்தின் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், செல்வத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், பிரேத பரிசோதனையை சென்னையில் நடத்த வேண்டும்’ என்று போராட்டக்காரர்கள் முறையிட் டனர்.
இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சார்-ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, சுமார் 4 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
நீதிபதி விசாரணை
செல்வம் உயிரிழப்பு தொடர் பாக, திருவள்ளூர் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, அரசு மருத்துவமனை மற்றும் கிளை சிறையில் விசாரணை நடத்தினார். சிறையில் உள்ள முரளி, கணபதி ஆகியோரிடமும் மருத்துவர்கள், சிறை காவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோத னைக்காக செல்வத்தின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனைக்கு அனுப்பப்பட்டது.
ஆத்தூர், காரனோடை, பொன்னேரி பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.