ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலையிட்டு, கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களுக்கு தாய்நாட்டில் பிழைக்க வழியில்லை என வாழ்வாதாரம் தேடி வெளியில் சென்றாலும், அங்கும் அடித்து நசுக்கப்படும் கொடுமை நிலவுகிறது. சென்னையில் இருந்து திருப்பதி சென்ற 32 தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தபோதும், முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும் என விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை. வியாழன் இரவு அவர்கள் கைது செய்யப்பட்டபோதும், சனிக்கிழமை சப்தகிரி ரயிலில் இவர்களை கைது செய்ததாக ரேணிகுண்டா காவல் துறையினர் தவறான தகவல் அளித்துள்ளனர்.
ஆந்திர போலீஸார் ஆந்திர எல்லை பகுதியில் பயணிக்கும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரால் அழைத்துச் சென்று, வழக்கு தொடர்ந்து சித்தரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக உள்ளது.
சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின், இது போல் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இறுதியில் திருப்பதி நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்தது. இந்நிலையில்தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 32 தமிழர்களை பின்தொடர்ந்த ரேணிகுண்டா காவல்துறையினர், கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் என்ற இடத்தில் கைது செய்துள்ளனர். அவர்கள் செம்மரம் கடத்தும் கும்பல் என்றும், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அவர்களை கைது செய்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களில் 29 பேர் திருவண்ணாமலை, 2 பேர் வேலூர் மற்றும் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் அவர்களிடம் இருந்து கோடரி, கத்தி, கடப்பாரை ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் கூறியுள்ள னர்.
இதில் கைதான ராஜேந்திரன் மனைவி மேனகா, கணவர் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் சென்றதாக தெரிவித் துள்ளார். சங்கர் என்பவர் மனைவி அமுதா, கார்த்திகேயன் மனைவி பட்டம்மாள் உள்ளிட்டோரும் பிழைக்கச் சென்ற தங்கள் கணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.சுப்பாராவும் ஆந்திர காவல் துறையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர, தமிழக மக்களுக்கு இடையில் நல்லுறவு நிலைக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவர்.
எனவே, இந்த பிரச்சினையில் தலையிட்டு , கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆந்திர காவல் துறையினரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களை கைது செய்யும் போக்கை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.