சென்னை சேத்துப்பட்டில் தொழிலதிபர் வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர் கோவிந்தாச்சாரி. பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களின் மகள் பிரியா திருமணமாகி, சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலை நிமித்தமாக கோவிந்தாச்சாரி மற்றும் மீனாட்சி இருவரும் அமெரிக்கா சென்றனர். இந்நிலையில் பிரியா தந்தை வீட்டுக்கு நேற்று வந்தார். கதவைத் திறந்து உள்ளே சென்றபோது பீரோ மற்றும் தனியாக இருந்த லாக்கர்கள் உடைந்து கிடந்தன. அதில் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்கம், வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த பிரியா சேத்துப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் ஜன்னல், பீரோ மற்றும் லாக்கர்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் கடந்த 9-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.