தமிழகம்

பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை தேவை: வாசன்

செய்திப்பிரிவு

பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும், நோய் தாக்கியவர்களை காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் ஆங்காங்கே பலர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 மாதங்களில் சுமார் 1200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர், திருச்சி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் தாக்கப்பட்டதால் பல பேர் பலியாகியுள்ள சூழலில், மேலும் பலருக்கு இந்நோய் தாக்கப்பட்டிருக்கும் அறிகுறிகள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நோய் தமிழக எல்லையோரப் பகுதிகளின் மூலம் தமிழகத்திற்கு பரவியிருப்பதால் எல்லையோரப் பகுதிகளில் பரிசோதனை மையங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுத்து, நோய் தாக்கியவர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

நோய் தாக்குவதற்கு முன்பே அது குறித்த விழிப்புணர்வையும், நோய் தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக சுகாதாரத்துறையின் கடமை. பருவகால மாற்றங்கள் தொடங்கப்படும் போது நோய் தாக்குவதற்கான சூழல் உள்ளதால் ஆரம்பக்கட்டத்திலேயே சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எவரேனும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது தெரிந்த உடனேயே அந்நோய் பரவாமல் தடுப்பதற்கும், நோய் தாக்கியவருக்கு போதிய முழு தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற வேண்டும்.

இதற்காக நகரம் முதல் கிராமம் வரை அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதிய மருந்துகள் இருப்பில் இருப்பதையும், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் போதிய அளவில் முழு நேர மருத்துவச் சேவைக்காக பணியில் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக தொற்று நோய்கள் எளிதில் பரவுவதால் அவற்றை பரவாமல் தடுப்பதற்கு அனைத்து சுகாதார வசதிகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கடமை. நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் முறையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும், நோய் தாக்கியவர்களை காப்பாற்றவும் தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், இனிமேல் இந்நோய் மேலும் பரவாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT