தமிழகம்

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகே நேற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சற்று தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 95 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலையாக 80.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக் கூடும்.

தமிழகத்தில் வெப்பநிலையை பொறுத்தவரை இன்று, மதுரையில் அதிகபட்சமாக 100.76 டிகிரி ஃபாரன்ஹீட், பாளையங்கோட்டையில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூரில் 97.7 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னையில் 97.34 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி மற்றும் சேலத்தில் 96.98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பாதிவாகியுள்ளது.

மழையை பொறுத்தவரை, உதகையில் 64.4 மி.மீ, மதுரையில் 33 மி.மீ, வால்பாறையில் 16 மி.மீ, கொடைக்கானலில் 11.5 மி.மீ, வேலூரில் 9.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT