தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் லிங்கபைரவி கொண்டாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி 21 நாள் ‘பெண்களுக்கான சிவாங்கா சாதனா’ விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் ஈஷா மையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். கோவை, மேட்டூரைச் சேர்ந்த ஏராளமானோர் பாத யாத்திரையாக வந்தனர்.
ஆலந்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப்பாரியிலேயே லிங்க பைரவி உருவத்தை வடிவமைத்து, ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். ஏராளமானோர் முளைப்பாரித் தட்டுகளுடன் வந்தனர்.
ஈஷா யோகா மையத்தில் விரதத்தை முடித்துக்கொள்ள வந்த பெண்கள், தேவிக்கு தானியம் மற்றும் தேங்காய் அர்ப்பணித்து, பூஜை நடத்தினர்.
இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
சிவாங்கா என்றால் சிவனின் அங்கம் என்று பொருள். சிவாங்கா சாதனா என்பது, படைப்பின் அங்கமாக இருப்பதில் இருந்து படைத்தவனின் அங்கமாக இருப்பதைநோக்கி முன்னேறும் பயணமாகும்.
நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒன்றுதான். ஆனால், அதை அனுபவத்தில் உணர முடியும். பக்தியின் மூலம் பூமியின் ஒருபகுதியாக வாழாமல், சிவனின் அங்கமாக வாழலாம் என்றார்.