*
ஓசூரில் நகை பறிப்பு கொள்ளைக் கும்பலை பிடிக்க முயன்றபோது, தலைமைக் காவலர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சுமன் மனைவி பார்வதி (28). சினகிரிப்பள்ளியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரு கிறார். 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சினகிரிப்பள்ளியில் இருந்து உத்தனப்பள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், பார்வதியின் கழுத்திலிருந்த 3 பவுன் நகையைப் பறித்தனர். இதைத் தடுத்த அவரை தாக்கிய 3 பேரும் நகையுடன் தப்பி ஓடினர்.
தப்பிய கும்பல், ஓசூர் பாரதிதாசன் நகரில் ஒரு வீட்டில் மறைந்திருந்திருப்பதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மாடியில் மறைந்திருந்தவர்களைப் பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் நாக ராஜை கொள்ளையர்கள் தாக் கினர். தலைமைக் காவலர் முனு சாமியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, தனபாலையும் தாக்க முயற்சித்தனர். அப்போது, அந்த கும்பலில் ஒருவரை அவர் பிடித்தார்.
இந்தத் தாக்குதலில் காய மடைந்த உதவி ஆய்வாளர் நாக ராஜ், தலைமைக் காவலர்கள் முனு சாமி, தனபால் ஆகியோர் ஓசூர் தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். சிகிச்சை பலனின்றி முனு சாமி நள்ளிரவில் உயிரிழந்தார்.
போலீஸில் சிக்கிய இளைஞர், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜி.எம்.பாளை யத்தைச் சேர்ந்த புஜ்ஜி (எ) மூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவரது கூட்டாளிகள், பெங்களூருவைச் சேர்ந்த விக்கி, அம்ரா, சாஹித் என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றபோது, மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தலைமைக் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய விக்கி, அமரா, சாஹித் உள்ளிட்ட சிலரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் கே.திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். 1994-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவரது மனைவி முனிலட்சுமி, மாருப்பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரு கிறார். இவர்களுக்கு ரக்சனா (17) என்ற மகளும், விபேந்திரா (11) என்ற மகனும் உள்ளனர். ரக்சனா பிளஸ் 2 தேர்வில் 1,182 மதிப்பெண் பெற்றுள்ளார். விபேந்திரா 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தலைமைக் காவலர் முனுசாமி, குற்ற வழக்குகளை கண்டு பிடிப்பதில் திறமையானவர். கடந்த டிசம்பர் மாதம், ஓசூர் உட்கோட்டத்தில் எஸ்ஐ நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோருடன் இணைந்து 17 வழக்குகளில் 72 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை மீட்டுள்ளார்.
பெங்களுரு மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் லோகேஷ்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘ஓசூர் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட மூர்த்தி உள்ளிட்ட சிலர் மீது பெங் களூரு போலீஸார் எடுத்த நடவ டிக்கை காரணமாக, பெங்க ளூருவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, மாநில எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர்” என்றார்.
தலைமைக் காவலர் முனுசாமியின் உடல், அவரது சொந்த ஊரான கே.திப்பனப் பள்ளிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஐஜி தர், சேலம் சரக டிஐஜி நாகராஜ், எஸ்பி(பொறுப்பு) கங்காதர் மற்றும் போலீஸார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, முனுசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது