தமிழகம்

இறந்த பிறகு எழுத்தாளனை பெருமைப்படுத்தும் நியதி மாறிவருகிறது: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கருத்து

செய்திப்பிரிவு

எழுத்தாளனை இறந்த பிறகு பெருமைப்படுத்தும் நியதி தற்போது மாறி, இருக்கிறபோதே அவர்களை பெருமைப்படுத்துவது, அவர்களின் புத்தகங்களை வெளி யிடுவது என காலம் மாறிக் கொண்டிருக்கிறது என நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரி வித்தார்.

சென்னை தீவுத்திடலில் நடை பெற்று வரும் 39-வது புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் 39 புதிய நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடை பெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய நூல்களை வெளியிட்டு நீதிபதி வெ.ராமசுப்பிர மணியன் பேசியதாவது:

இன்றைக்கு காலம் கெட்டுப் போய் விட்டது என்று நினைக் கிறோம். தலைமுறை வீழ்ச்சி என்பது எல்லா காலத்திலும் எல்லாராலும் புலம்பப்படும் ஒன்று. ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட வீழ்ச்சி நடக்கிறதா என்பதை எண்ணிப்பார்த்தால் அது இல்லை என்பதை நிரூபிக்கக் கூடிய ஒரு செய்தி சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவில் நடந்தது.

அந்த புத்தகத் திருவிழாவில் மிக அதிகம் விற்கப்பட்ட புத்தகம் எது என்று தெரிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். காந்தி அடிகளின் சத்திய சோதனைதான் அந்த புத்தகத் திருவிழாவில் அதிமாக விற்கப்பட்ட நூல். இதை நாம் நினைத்துப் பார்க்கிறபோது வீழ்ச்சி என்பது நாம் புலம்புகிற அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறதா என்பதை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுதந்திர இந்தியாவுக்காக பாடு பட்ட பாரதி இறந்தபிறகு அவருடைய இறுதி ஊர்வலத்தில் 11 பேர் மட்டுமே கலந்து கொண் டார்கள். அவர் இருக்கும் வரை அவருடைய பெருமையை தெரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.

இதேபோன்று, எழுத்தாளன் இறந்த பிறகுதான் பெருமை பெறுவது என்பது உலகத்தில் ஒரு நியதியாக இருந்திருக்கிறது. அந்த நியதி தற்போது மாற்றப்படு கிறது. அவர்கள் இருக்கிறபோதே அவர்களை பெருமைப்படுத்துவது, அவர்கள் புத்தகங்களை வெளியிடு வது என காலம் மாறிக்கொண்டிருக் கிறது. எழுதுகோலும், எழுத்தும் தெய்வம் என்றான் பாரதி. எவன் ஒருவன் இவையிரண்டையும் தெய்வமாக நினைக்கிறானோ அவன் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கின்றான். அப்படிபட்ட பாரம்பரியத்தை தமிழ்வாணன் விட்டுச்சென்றார். அதை அவரது பிள்ளைகள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர் லேனா தமிழ்வாணன், நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்றனர். திரைப்பட இயக்குநர் மிஷ்கின், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, இளவரசு, நடிகை தேவதர்ஷினி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT