தமிழகம்

தடய அறிவியல் ஆய்வுக்காக எஸ்.ஐ. பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றியது சிபிசிஐடி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞரை சுட்டுக் கொல்ல எஸ்ஐ பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் எஸ்ஐ-யை குத்த இளைஞர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கத்தி ஆகியவற்றை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.

எஸ்பி பட்டினம் காவல் நிலை யத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப் பட்ட சையது முகம்மதுவை, எஸ்ஐ காளிதாஸ் சுட்டுக் கொன்றார். காவல் நிலையத்துக்குள் நேரிட்ட இந்தச் சம்பவம் குறித்து ராமநாத புரம் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி மன்மத பாண்டியன் விசாரணை அதிகாரி யாகவும், இன்ஸ்பெக்டர்கள் சந்திர சேகர், சரவணக்குமார் ஆகியோர் உதவி அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.

எஸ்ஐ காளிதாஸ், காவலர் ஐயப்பன் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் புதிதாக 2 வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை எஸ்பி பட்டினம் காவல் நிலையத் தில் ஆய்வு நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், எஸ்ஐ காளிதாஸ் பயன்படுத்திய துப்பாக்கி, சையது முகம்மது பயன்படுத்தியதாகக் கூறப்படும் கத்தி மற்றும் உடைகள் உள்ளிட்ட சில பொருட்களை கைப் பற்றி தடய அறிவியல் ஆய்வகத் துக்கு அனுப்பினர். மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அறையில் ஆய்வு நடத்த வருமாறு தடய அறிவியல் நிபுணர்களை சிபிசிஐடி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, திருவாடானை பயணிகள் விடுதியில் சையது முகம்மதுவின் சகோதரர் நூர் முகம்மது உட்பட 3 பேரிடம் ராம நாதபுரம் மாஜிஸ்திரேட் வேலுச் சாமி விசாரணை நடத்தினார். மேலும், 4 பேரை வரும் 24-ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

6 பேர் பணியிட மாற்றம்…

இதனிடையே, எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு எஸ்ஐ பரமசிவம், ஏட்டுகள் துரைக்கண்ணு, தனபால், அய்யப்பன், இளைஞர் காவல் படையைச் சேர்ந்த மகாலிங்கம், ஜான்பாபு ஆகிய 6 பேரையும் ராமநாதபுரம் ஆயுதப் படைக்கு பணியிட மாறுதல் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டார்.

இந்த 6 பேரிடமும் மற்றும் சையது முகம்மது உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட பலரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், எஸ்ஐ காளிதாஸிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.

SCROLL FOR NEXT