200 ஆண்டுகள் பழமையான 134 பீரங்கி கல் குண்டுகள், வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப் படைக்க தி.மலை ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதன் படி, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட கல் குண்டுகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜோதி. கடந்த 2005-ம் ஆண்டு, இவருக்குச் சொந்தமான நிலத்தில் வாழை மரங்கள் நடுவதற்காக குழிகள் வெட்டும் பணி நடந்தது. அப்போது, மண்ணில் புதைந் திருந்த சிறிய கல் குண்டு குவியலை கண்டெடுத்தனர்.
அந்த கல் குண்டுகளை செங்கம் வருவாய்த் துறையினர் மீட்டு, அரசு கருவூலத்தில் பாதுகாப் பாக வைத்தனர். பீரங்கியில் பயன்படுத்தப்படும் இந்த கல் குண்டுகளை ஆய்வு செய்தபோது, 200 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது.
இந்நிலையில், செங்கம் கருவூலத்தில் இருந்த பீரங்கி கல் குண்டுகளை, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி, பீரங்கி கல் குண்டுகளை வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம், செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் ஒப்படைத்தார்.
கல் குண்டுகள் ஒவ்வொன்றும் 5 செ.மீ உயரம், 23 செ.மீ சுற்றளவு மற்றும் 340 கிராம் எடை உள்ளது. மொத்தம் 134 கல் குண்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியக அதிகாரிகள் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறும்போது, ‘‘இந்த வகையான கல் குண்டுகளை பீரங்கியில் பயன்படுத்தி கோட்டையின் கதவுகள், எதிரியின் மதில் சுவற்றை சேதப்படுத்தப் பயன் படுத்துவார்கள்.
பீரங்கியில் வெடி மருந்துடன் கல் குண்டை வைத்து சுடும்போது, அதிக வேகத்தில் செல்லும் கல் குண்டு எதிரியின் இலக்கை கடுமையாக சேதப்படுத்தும். இந்த கல் குண்டு களை ஆங்கிலேயர்கள் அல்லது ஆற்காடு நவாப்புகள் பயன்படுத்தி இருக்கலாம்’’ என்றார்.