தமிழகம்

சட்டப்பேரவை குழுக்கள் அமைக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் பேரவை செயலர், அரசுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை குழுக்களை உட னடியாக அமைக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக் கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலர், அவை முன்னவர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்தது. புதிய சட்டப்பேரவை அமைந்து 6 மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. ஆனால், பேரவை நிலைக்குழு, பொதுக்கணக்குக் குழு, உரிமைக் குழு, விதிகள் குழு, பொது நிறு வனங்கள் குழு, அலுவல் ஆய்வுக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்த குழுக்களை அமைக்கக் கோரி தமிழக ஆளுநரிடம் டிசம்பர் 2-ம் தேதி மனு கொடுத்தேன். அதன்பிறகு சட்டப்பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர், அவை முன்னவர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு டிசம்பர் 27-ல் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டப்பேரவைக் குழுக்களை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர், அவை முன்னவர், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரவைத் தலைவரும் பதிலளிக்கநோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, அதுதொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT