ராகுல் காந்தியை 2019 தேர்தலில் பிரதமராக அமர்த்துவோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே அவருக்கு நாம் வழங்குகிற பிறந்தநாள் பரிசு என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ராகுல் காந்தியின் பிறந்தநாள் ஜூன் 19-ம் தேதி வருகிறது. இதனை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் தங்கள் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதியோர் இல்லங்களில் உணவு அளித்தல் போன்ற நிகழ்ச்சிகளை கட்சியினர் நடத்த வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறுகிற மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து களத்தில் நின்று போராடுகிற மாவீரனாக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி சமுதாயம் பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்குவேன் என்று உரக்க முழங்கியவர் மோடி. ஆனால் விவசாயிகள் தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நாடு முழுவதும் 4 கோடி விவசாயிகளின் கடன் தொகையான ரூ. 63 ஆயிரம் கோடியை ரத்து செய்தது. தற்போது மத்திய நிதியமைச்சர் விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளார். கடனுக்கான வட்டி மானியம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை.
மத்திய காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், வேலை பெறும் உரிமைச் சட்டம், மதியஉணவு திட்டம், நில கையகப்படுத்துதல் சட்டம், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதார் அடையாள எண், நேரடி பயன்கள் திட்டம் என சாதனை பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று செல்பேசி இணைப்புகள் 120 கோடி மக்களை எட்டியுள்ளது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த பெருமை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு உண்டு.
நரேந்திர மோடியின் ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டும். ஜூன் 19-ம் தேதி மக்களை திரட்டி ராகுல் காந்தியை 2019 தேர்தலில் பிரதமராக அமர்த்துவோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே அவருக்கு நாம் வழங்குகிற பிறந்தநாள் பரிசாகும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.