தமிழகம்

தேய்பிறையான தீபா பேரவை

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் எழுச்சியுடன் இருந்த தீபா பேரவை தற்போது கலகலத்துள்ளது. ஆதரவாளர்கள் ஓபிஎஸ் அணியில் இணைய முடிவெடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், விஜயகுமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், தமிழ்மகன் உசேன் ஆகியோர் சசிகலா அணியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத், பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். தொண்டர்கள் பெரும்பாலானோர் தீபா ஆதரவு மனநிலையில் இருந்தனர். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் உதயன், கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளரான சூரங்குடியைச் சேர்ந்த ரசாக், தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அணியில் இணைய உள்ளார்.

தொண்டர்கள் கருத்து

ரசாக் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தீபா பேரவையில் உறுப்பினராக சேர்த்திருந்தோம். முன்பு தீபாவுக்கு அமோக ஆதரவு இருந்தது. அவரது செயல்பாடுகளால் தற்போது ஆதரவு குறைந்துவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகருக்கு சென்றுள்ளனர். ஆனால், தீபா எங்களை அழைக்கக் கூட இல்லை. அவர் ஏதோ விளையாட்டாக கட்சி நடத்துவது போல் உள்ளது. ஓபிஎஸ் அணியில் சேர வேண்டும் என, தொண்டர்கள் கருத்து சொல்கின்றனர். அதன்படி ஓபிஎஸ் அணியில் இணைவோம்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT