காலியிடம் இல்லாததால் தமிழகத்தில் சுமார் 70 துணை ஆட்சியர்கள் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் துணை ஆட்சியர் நிலையில் 850 பணியிடங்கள் உள்ளன. இவர்கள், வருவாய்த் துறையில் கோட்டாட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட விநியோக அலுவலர், கலால் அலுவலர் மற்றும் முத்திரைத் தாள், நிலம், டாஸ்மாக் உட்பட பல்வேறு பிரிவு அலுவலங்களில் பணியாற்றுகின்றனர்.
வட்டாட்சியராக பணியாற்றுவோர் பதவி உயர்வு மூலமும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவோர் நேரடியாகவும் துணை ஆட்சியர்களாக நியமிக்கப்படுகின்றனர். சமீப காலமாக இந்தப் பணியிடங்களில் காலியிடங்களை கணக்கிடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கெனவே துணை ஆட்சியர் களாக பணியாற்றி வந்த 20 பேர் வேறு பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருக்கின்றனர்.
நேரடியாக தேர்ந்தெடுக் கப்பட்டு பயிற்சி முடித்தவர்கள் கோட்டாட்சியர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், காலியிடம் இல்லாததால், பயிற்சி முடித்த 52 பேருக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பணியிடம் ஒதுக்கப்பட்டது.
அதேவேளையில், பயிற்சி முடித்தவர்களுக்காக வெளி யேறிய 52 துணை ஆட்சியர்கள் புதிய பணியிடம் ஒதுக்கப்படாமல் தவித்து வந்த நிலையில், நேற்று 8 பேருக்கு மட்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது சுமார் 70 துணை ஆட்சியர்கள் பணியிடம் ஒதுக்கப்படாததால் தவிக்கின்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘காலியிடங்களை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம். கடந்தாண்டு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட பலருக்கு பணி நியமன ஆணை அளிக்கப்படவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் நிலைக்கு பதவி உயர்வு பெறும் துணை ஆட்சியர்கள் 45 பேரின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால் 70 துணை ஆட்சியர்கள் பணியில் சேர முடியாத நிலை உள்ளது. எப்போது பணியிடம் ஒதுக்கப்படும் என்பதையும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.
இவர்களை விதிப்படி காத்திருப்போர் பட்டியலில் வைத்தாலும் ஊதியம், விடுமுறை உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். இதனால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வீண் செலவாகிறது’ என்றார்.