தமிழகம்

முகநூல் மூலம் மக்களிடம் குறைகளை கேட்ட நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ

என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்ராஜன் நேற்று முகநூல் மூலம் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் கன்னி யாகுமரி. இதன் தலைநகரான நாகர் கோவில் பகுதியில் கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக அதிகம். இங்குள்ள இளைஞர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணி செய்கின்றனர்.

தொகுதியை சேர்ந்த வெளியூர்களில் வசிக்கும் மக்களின் குறைகளை முகநூல் மூலம் கேட்கப் போவதாக நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்ராஜன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

முகநூல் மூலம் குறைகேட்பு

இதன்படி நேற்று முகநூல் மூலம் வாக்காளர்களுடன் அவர் பேசினார். 416 பேர் தங்கள் பகுதியிலிருக்கும் குறைகளை நேரலையாக அவரிடம் பதிவு செய்தனர். அதில் பிரதானமாக நாகர்கோவில் நகரில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த சுரேஷ்ராஜன், ‘‘நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன்’’ என தெரிவித்தார்

.இது குறித்து சுரேஷ்ராஜன் ‘‘தி இந்து’’விடம் கூறும்போது, ‘‘இளம் தலைமுறையினர் அதிகம் பேர் இப்போது முகநூலில் உள்ளனர். இவர்களில் பலர் பணி நிமித்தம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கின்றனர். இவர்களின் குறைகளையும் கேட்கவே இந்த ஏற்பாடு. இனி மாதம் ஒரு முறை முகநூல் மூலம் வாக்காளர்களின் குறைகளை கேட்க உள்ளேன்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT