தமிழகம்

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

டி.செல்வகுமார்

சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ராமலிங்க அடிகளார்

வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்:

ஏழுகிணறில் வீடு

ராமலிங்க அடிகள் சென்னை பாரிமுனையை அடுத்துள்ள ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் உள்ள 39-ம் நம்பர் வீட்டில் தனது 2-வது வயது முதல் 32-வது வயது வரை (கி.பி.1826 முதல் 1858 வரை) வசித்தார். இங்கு தனது 9-வது வயதில் முருகப்பெருமானை நினைத்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த முருகப் பெருமான்

ஒருநாள், சுவரில் கண்ணாடியை மாட்டி, மலர் சாத்தி, தீபம் வைத்து அந்தக் கண்ணாடியில் உள்ள தீபத்தை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தார் ராமலிங்கர். அப்போது அந்தக் கண்ணாடியில் முருகப் பெருமான் காட்சி கொடுத்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள்

இந்த வீட்டின் மாடியில் இருந்துதான் ராமலிங்கர் ஆயிரக்கணக்கான திருவருட்பா பாடல்களை எழுதினார். இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். கடைசி நாட்களில் இந்த வீட்டில்தான் ராமலிங்கரின் மனைவியும், பின்னர் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தனர்.

மகத்துவம் மிக்க திண்ணை

இந்த வீ்ட்டில் தெருவை ஒட்டி இரும்புக் கதவும், உள்ளே 39 என்ற பித்தளை எண்ணுடன் கூடிய ஒற்றை மரக்கதவும் உள்ளன. இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையே தெருவில் இருந்து உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் ஒரு சிறிய திண்ணை இருந்தது.

ராமலிங்க அடிகளார், சிறுவனாய் இருந்தபோது, தினமும் திருவொற்றியூர் போய்விட்டு இரவு நேரம்கழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் மரக்கதவை தாழிட்டுவிட்டு, இரும்புக் கம்பி கதவை சாத்தி வைத்திருப்பார்கள். ராமலிங்கர் அந்த இரும்புக் கம்பி கதவைத் திறந்து அங்கிருந்த திண்ணையில் படுத்துத் தூங்குவார்.

ஒருநாள் இரவு பசியோடு வந்து திண்ணையில் படுத்து உறங்கியபோது உமாதேவியார் கிண்ணத்தில் அமுதோடு வந்து, ஒற்றியூர் போய் பசித்தணையோ என்று கேட்டு, உணவளித்தார் என்று திருவருட்பா சொல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அந்த திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கழிப்பறை அகற்றப்படுகிறது

இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளரான ஸ்ரீபதி கூறுகையில், எங்கள் தாத்தா 1936ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். கடந்த 80 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு முன்பு இந்த வீட்டை வைத்திருந்தவர்கள் வலதுபுற திண்ணையை இடித்துவிட்டு அதில் கழிப்பறை கட்டியிருந்தனர்.

ராமலிங்க அடிகளார் இருந்த இடம் என்பதால் அந்த கழிப்பறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இடதுபுறத்தில் உள்ள பெரிய திண்ணையைத்தான் ராமலிங்க அடிகளார் அதிகம் பயன்படுத்தினார். அந்த திண்ணை தற்போது தனி அறையாக உள்ளது' என்றார்.

SCROLL FOR NEXT