பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று (திங்கள் கிழமை) தொடங்குகிறது. தினமும் ஏறத்தாழ 5 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயி ரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 25-ம் தேதி மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், பொது கலந்தாய்வு (அகாடமிக்) இன்று (திங் கள் கிழமை) தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 7 மாணவர்கள் உட்பட முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் ஏ.கார்த்திக், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் நாராயணசாமி, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கும் உடன் வருவோருக்கும் தற்காலிக ஓய்வறை, குடிநீர், கழிப்பறை, கேன்டீன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கும் பொது கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாள் மட்டும் கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும். தினமும் ஏறத்தாழ 5 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.