தமிழகம்

சென்னை ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்திய விவகாரத் தில் கூடுதல் இழப்பீடு வழங்காத தால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய மாநகர 6-வது சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி வழக்கறிஞர் துரைசாமி கூறியதாவது: வடபழனியில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 49 சென்ட் நிலத்தை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவு 1988-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக கோயில் நிர்வாகத்துக்கு ரூ.2.75 லட்சம் வழங்கப்பட்டது.

இழப்பீட்டை உயர்த்தி வழங்கக் கோரி மாநகர 6-வது சிவில் நீதிமன்றத்தில் கோயில் பரம்பரை அறங்காவலர் பிரேம் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார். இழப்பீட்டை 3 மடங்காக உயர்த்தி வழங்கவும், 1988-ம் ஆண்டில் இருந்து வட்டி கணக்கிட்டு சேர்த்துத் தருமாறும் 2010-ல் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி சென்னை ஆட்சியர் அலுவலகம் ரூ.20 லட்சம் வழங்கவேண்டி இருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கூடுதல் இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், நீதிமன்றத்தில் கோயில் அறங்காவலர் மீண்டும் வெளியேற்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் அளித்தோம். இழப்பீட்டை வழங்க அவர் நவம்பர் 6-ம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT