தமிழகம்

கடும் வறட்சி, தீவனம் விலை உயர்வால் பாதிப்பு: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தித் தர வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது அலி கூறினார்.

இது தொடர்பாக அவர் நாமக்கல் லில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தீவனம் விலை உயர்ந்து உள்ளது. வறட்சியை கருத்தில்கொண்டு ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகும் பசு மாடுகளை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு கால்நடைகளுக்கான தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.

ஆவின் நிர்வாகம் நிலுவையில் உள்ள ரூ.300 கோடியை பால் உற் பத்தியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.28, எருமைப்பாலுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்தது. அப்போது 60 கிலோ கொண்ட கால்நடை தீவனம் ரூ.740-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீவனம் ரூ.1140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

எனவே பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தி ரூ.35, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி ரூ.50 வழங்க வேண்டும். தமிழக அரசு வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில தலைவர் முனுசாமி, துணை தலைவர் சிவாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT