தியாகராயநகரில் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடை இயங்கி வந்தது. இந்நிலையில், தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி அதிகாலை தீப்பிடித்தது. இதில், கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து 2-ம் தேதி முதல் கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. ராட்சத ‘ஜா கட்டர்’ என்னும் இயந்திரம் மூலம் இடிப்பு பணி நடந்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் இடிப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக கட்டிடத்தை இடிக்கும் தனியார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட 90 சதவீத இடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்றோடு இடிப்பு பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதைத் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்க உள்ளது. அப்போது தரை தளத்தில் உள்ள நகை பெட் டகம் மீட்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.