அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது சட்டப்படி செல்லாது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ''அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதே செல்லாது. அதனால் சசிகலாவால் அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்ததும் சட்டப்படி செல்லாது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
கடந்த 9-ம் தேதி சசிகலா ஆளுநரை சந்திக்கச் சென்றபோது 14-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்கச் சென்றபோதும் அவர்களுடன் டிடிவி தினகரன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் சசிகலாவுடன் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருந்து வருகிறர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோர் விரைவில் சிறை செல்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் அதிர்வலைகளுடன் அதிமுகவில் உட்கட்சி பூசலும் வலுத்துவரும் நிலையில் டிடிவி. தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டார்.
கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் முக்கியப் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டது. சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து கருப்பசாமி பாண்டியன் விலகினார்.
இந்த சூழலில் அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது சட்டப்படி செல்லாது என்று பொன்னையன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.