டெல்லி சட்டமன்றத் தேர்தலை யொட்டி தேமுதிக வேட்பா ளர்களுக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார்.
டெல்லியின் 11 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதை யொட்டி கடந்த புதன்கிழமை மனைவி பிரேமலதாவுடன் டெல்லி வந்த விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் தனித்தனியாகப் பிரச்சாரம் செய்யும் விஜயகாந்தும் பிரேமலதாவும் தமிழிலேயே பேசுகின்றனர்.
பிரசாரத்தில் விஜயகாந்த் பேசியபோது, ’தமிழர்கள் வாழும் பகுதிகளில் சாலை, கழிவறை, மருத்துவ வசதிகள் இல்லை. தேமுதிக வெற்றி பெற்றால் அந்த வசதிகளை செய்து தருவோம்.’ எனக் கூறுகிறார். தனியாகப் பிரச்சாரம் செய்யும் பிரேமலதா, தேமுதிக வெற்றி பெற்றால் டெல்லியின் குடிசைகளை அடுக்கு மாடி வீடுகளாக மாற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தனது பிரசாரத்தின்போது இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜயகாந்த், காங்கிரஸை நேரடியாக விமர்சித்துப் பேசவில்லை.
நவம்பர் 30 வரை விஜயகாந்தும் பிரேமலதாவும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடைசி நாளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் இருவரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இந்த தொகுதியில்தான் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் விஜய் கோயல், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இது குறித்து தேமுதிகவின் இளைஞரணித் தலைவரும், டெல்லி தேர்தல் பொறுப்பாளருமான எல்.கே.சுதீஷ், “தி இந்து” நிருபரிடம் பேசியபோது, ‘டெல்லியில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் இருப்பதாக ஆங்கில பத்திரிகைகளில் படித்த எங்களுக்கு அதிர்ச்சி. இவ்வளவு பேர் இருந்தும் தமிழக அரசியல் கட்சிகள், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முன் வராதது ஆச்சரியமாக உள்ளது. தென் இந்தியாவைச் சேர்ந்த கட்சிகளும்கூட இதுவரை போட்டி யிட்டதில்லை’ எனத் தெரிவித்தார்.
டெல்லியில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையில் வாக்குரிமை பெற்றவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் மட்டுமே எனக் கூறப்படுகிறது. இவர்களும் பல்வேறு தொகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர்.
இது குறித்து சுதீஷிடம் கேட்டபோது, ‘எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது டெல்லிவாசிகள் அனைவரிடமும் நல்ல வரவேற்பு, மரியாதை கிடைக்கிறது. இதனால், எங்கள் வெற்றிவாய்ப்பு நிச்சயம்” என உறுதிபடத் தெரிவித்தார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வின் இரு எம்.எல்.ஏக்கள், 11 மாவட்டச் செய லாளர்கள் ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டெல்லி முனிசிபல் மாநகராட்சி தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டனர். ஆனால், அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது குறித்து அந்தக் கட்சியின் டெல்லி மாநில செயலாளராக இருந்த தானப்பனிடம் பேசினோம்.
பாமகவில் இருந்து விலகி, தேதிமுக சார்பில் ராஜேந்தர் நகர் தொகுதியில் போட்டியிடும் தானப்பன், “தி இந்து” நிருபரிடம் கூறியபோது, ‘70 தொகுதிகளில் ஒன்றில்கூட தமிழர்கள் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் இல்லாதது உண்மைதான். ஆனால், எங்கள் கட்சிக்கு வெற்றியைவிட தேமுதிக குறித்த விழிப்புணர்வே முக்கியம். எனவேதான் இந்தப் போட்டி.’ எனக் கூறுகிறார்.