தெற்கு சென்னை ரோட்டரி கிளப், டேக் நிறுவனம் மற்றும் விஎச்எஸ் மருத்துவமனை இணைந்து ரூ.1.5 கோடி செலவில் விழித்திரை பரிசோதனை மையத்தை விஎச்எஸ் மருத்துவமனையில் நிறுவியுள்ளன. இந்த விழித்திரை பரிசோதனை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ‘இந்து’ என்.முரளி மையத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் என்.முரளி பேசியதாவது:
விஎச்எஸ் மருத்துவமனை கடந்த 1958-ம் ஆண்டு முதல் ஏழை மக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. மருத்துவமனை படிப் படியாக உயர்ந்து தற்போது 450 படுக்கைகளுடன் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக திகழ்கிறது. மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னுதாரணமாக விஎச்எஸ் மருத்துவமனை இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கிறது. இந்த மருத்துவமனையால் சென்னை பெருமை அடைகிறது. கடந்த 1976-ம் ஆண்டு பார்வை திறன் குறைபாட்டை நீக்க மத்திய அரசு ஒரு திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் 60 சதவீதம் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. சுகாதார கொள்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் ஒதுக்கப் படுகிறது.
இவ்வாறு என்.முரளி தெரிவித்தார்.
விஎச்எஸ் மருத்துவமனையின் சர்க்கரை நோய் ஆய்வுத்துறை தலைவர் டாக்டர் சி.வி.கிருஷ்ண சாமி பேசுகையில், “இந்த மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,000 குழந்தைகளுக்கு வாழ்நாள் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு கண் நோய்கள் முக்கிய பிரச்சினையாக உள்ளன. கேரள மாநிலம் கொச்சியில் ஆயுர்வேத மருத்துவத்தில் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோன்ற சிகிச்சை இங்கும் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
உதி கண் மருத்துவமனை நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.ரவீந்திரன் பேசும்போது, “தென்னிந்தியாவில் முதல் முதலில் விழித்திரை சிகிச்சை விஎச்எச் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கண் அறுவைச் சிகிச்சையில், இந்தியாவின் முதல் மருத்துவமனையாக உயர வேண்டும்” என்றார்.
இந்த விழாவில் டாக்டர்கள் எஸ்.பார்த்தசாரதி, சுப்ரியா, ஜபீர் கவுதம், எஸ்.சுரேஷ், இந்துமதி தர், தென்சென்னை ரோட்டரி கிளப் தலைவர் ஆஷா, முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணா ராஜா, ஆர்.டி.சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி கிளப் சார்பில் ரூ.2.85 லட்சம் நன்கொடையாக விஎச்எஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.