ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (சனிக்கிழமை) துவங்குகிறது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் அரசு விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி.பெருமாள் மறைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆளும் அதிமுகவும், திமுகவும் ஏற்கெனவே அறிவித்து, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. தேமுதிகவும் வேட்பாளரை விரைவில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதன் பிறகு, வேட்புமனுக்கள் பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும். வாக்குகள், டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்தத் தேர்தலையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகாக, மத்திய துணை ராணுவப் படையினர் சுமார் 250 பேர் வெள்ளிக்கிழமை சேலம் வந்தனர்.
சேலம் மாவட்டத்தில் அரசு விளம்பரங்களுக்குத் தடை
ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் அரசு விளம்பரங்களுக்கு தடை விதித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்காடு இடைத்தேர்தல் நடக்கவுள்ள சேலம் மாவட்டத்தில், அரசுப் பொருட்களை விநியோகம் செய்வதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசுப் பணத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் விளம்பரம் அளிக்கக் கூடாது. மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி சின்னங்களுடன் கூடிய அரசுப் பொருட்களை விநியோகிப்பது, அதற்கு விளம்பரம் செய்வது போன்றவையும் தேர்தல் நடத்தை விதிமுறையின்கீழ்தான் வரும்.
எனவே, அரசுப் பொருட்களை விநியோகம் செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. இதை உறுதிசெய்யுமாறு அனைத்து அரசு செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறினால் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பிரவீன் குமார் கூறியுள்ளார்.