தமிழகம்

இலங்கை - காமன்வெல்த் மாநாடு: நவ.5-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

காமல்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்பதை பிரதமர் உறுதி செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரும் 5-ம் தேதி சென்னையில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள காமல்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக ஒரு மித்த குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படியொரு முடிவை எடுத்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெற உள்ள சூழலில், சேனல் 4 தொலைக்காட்சி விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவை சிங்கள படையினர் பிடித்துச் செல்லும் காட்சியை வெளியிட்டுள்ளது.

இசைப்பிரியாவை சிங்களப் படையினர் திட்ட மிட்டுக் கொல்லவில்லை என்று ராஜபக்சே கும்பல் ஏற்கனவே கூறிவந்த நிலையில், அவர்கள் கூறியது பொய் என்பதை சேனல் 4 தொலைக்காட்சி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராஜபக்சே கும்பலின் உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய ராஜபக்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால், தமிழ் மக்களுக்கான நீதியைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, சிங்கள இனவெறியர்களின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் துணை நிற்குமேயானால் அரசியல் வரலாற்றில், எக்காலத்திலும் அழிக்க முடியாத களங்கத்தை காங்கிரஸ் கட்சி சுமக்க வேண்டிவரும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக் காட்டுகிறது. அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவைக் கைவிட வேண்டும் என்றும், காமல்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 5–ந் தேதி சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT