தமிழகம்

விழுப்புரம் நகரவாசிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்: மூன்று மாதங்களில் 9,390 பேருக்கு சிகிச்சை

என்.முருகவேல்

விழுப்புரம் நகரில் அண்மைக் காலமாக தெருநாய்களால் பாதிப் புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றனர் விழுப்புரம் நகரவாசிகள்.

கடந்த சில மாதங்களாக தெருநாய் கடிக்கு ஆளாகி விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலையில் நாய் குறுக்கிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிதாக நாய்க் கடித்து சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 45 முதல் 50 நபர்கள் என்று அங்கிருக்கும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக் கின்றனர். ஏற்கனவே நாய் கடித்து தினந்தோறும் ஊசி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் 150-ஐ தாண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 பேர் சாலையில் நாய் குறுக்கிட்டு விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2011-ல் 8 ஆயிரத்து 465 நபர்களும், 2012-ல் 10 ஆயிரத்து 872 நபர்களும், 2013-ல் 8 ஆயிரம் நபர்களும், 2014-ல் 10 ஆயிரத்து 565 நபர்களும், 2015-ல் 9 ஆயிரத்து 123 நபர்களும் நாய்க் கடிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 250 நபர்கள் விழுப்புரம் நகரில் மட்டும் நாய்க்கடிக்கு சிகிசைப் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஜூன் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுக்க 2 ஆயிரத்து 747 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை சுமார் 64 ஆயிரம் பேர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவனையில் நாய் கடிக்காக சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''நாய்க் கடிக்குத் தடுப்பு மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவில் உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 9 ஆயிரத்து 390 நபர்கள் நாய்க்கடிக்கு சிசிச்சைப் பெற்றுள்ளனர். வளர்ப்பு நாய்களால் கடிபட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம். ஆனால், இந்த 9,390 பேரில் 90 விழுக்காட்டிற்கு மேல் தெரு நாய்களால் கடிபட்டு வந்தவர் கள்தான்.

ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் தாலுகா மருத்துவ மனைகளிலும் நாய்க் கடிக்கு சிசிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மருந்து தட்டுப்பாடு இருந்தால், நாய் கடிக்கு உள்ளானவர்கள் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாய் கடித்தவுடன் முதலில் தடுப்பு மருந்தை அனைவரும் சிரமமின்றி போட்டுக் கொள்வது அவசியம்.'' என்றார்.

விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள் கூறும் போது, கடந்த இரு ஆண்டுகளாக நாய் களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கருத்தடை தற்போது நிறுத்தப் பட்டுள்ளது .அதனால் நகரில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் நகர் நல அலுவலர் ராஜாவிடம் கேட்டபோது, ''நாய் களுக்கான கருத்தடை செய் வதற்கு ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. விரைவில் நாய் களை இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்துவதோடு, வெறிநாய் களையும் பிடிப்போம்'' என்கிறார்.

விழுப்புரம் பசுமை அமைப்பைச் சேர்ந்த ரங்கன் என்பவர் கூறுகையில், ''தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதோடு, அவைகள் உணவுக் காக சாலையோரம் உள்ள மாமிசக் கடைகள் முன் நின்றுகொண்டு அங்குமிங்கும் திரிவதால் பைக்கில் செல்வோர் அதன்மீது மோதி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. பச்சை மாமிசங்கள் உண்ணும் தெருநாய்கள் வெறிப்பிடித்து திரிவதால் அவற்றின் வெறிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்கு ஆளாகிறோம். எனவே முதற்கட்டமாக சாலையோரத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும். தனியாக முறையாக தனியிடத்தில் இறைச்சிக் கூடங்களை அமைக்க வேண்டும். ப்ளூகிராஸ் அமைப்பினரோடு கலந்தாலோசித்து நாய் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT