தமிழகம்

கூட்டணி கட்சிகளுக்கு மோடி விருந்து: தேமுதிக, மதிமுகவுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? - தமிழக பாஜக துணைத் தலைவர் விளக்கம்

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் தமிழக கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு மட்டுமே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தாலும் தேசிய அளவில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.

மே மாதம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தேமுதிக, மதிமுக பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளுக்கு இன்று டெல்லியில் சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் தேமுதிக, மதிமுக கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தி கூறியபோது, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் விருந்து அளிக்கவில்லை, கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு மட்டுமே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாமகவைச் சேர்ந்த அன்புமணி மற்றும் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே விருந்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT