சுனாமியில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த மீன் பிடி தொழிலாளி குழந்தை களின் கல்விக்கு தனிப்பட்ட முறையில் நிதி உதவியும் வீட்டு மனை பட்டா கிடைக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ‘தி இந்து’செய்தி எதிரொலி யாக இந்த நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நெய் குப்பம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலை யில் சிக்கினர். இதில், 73 பேர் உடல் மட்டும் கண்டெடுக்கப் பட்டது. மற்றவர்களின் நிலை என்னவானது என்பது பற்றி இன்று வரை தெரியவில்லை.
இந்நிலையில், மாமல்ல புரம் அடுத்த கானத்து ரெட்டி குப்பம் பகுதியில், சுனாமி தாக்குதலில் சிக்கி மண்ணில் புதைந்ததால் உடல் உறுப்பு கள் செயலிழந்த நிலையில் சண்முகவேல் என்பவரை மீட்பு குழுவினர் மீட்டனர். அப்போது அவரை மருத்துவ மனையில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டார். ஆனால், 11 ஆண்டுகள் கடந்தும் அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக, கடந்த 2014-ம் ஆண்டு ‘தி இந்து’வில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும், அவருக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியின் நேரடி கவ னத்துக்கு கொண்டு செல்லப் பட்டது.
இதனை பரிசீலித்த ஆட்சி யர், சண்முகவேலின் இரு மகள்களின் கல்வி செலவை தனிப்பட்ட முறையில் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் முதல்வர் உத்தர விட்டபடி, அவருக்கு வீட்டு மனை பட்டா கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, சண்முக வேல் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான் பிழைப்புக்காக கானத்துரெட்டிகுப்பம் வந் தேன். மனைவி, மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். மீன்பிடி தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை குடும் பத்தினருக்கு அனுப்பி வைத்தேன். சுனாமி தாக்கு தலின்போது அலையில் சிக்கி மண்ணில் புதைந்தேன். மீட்பு குழுவினர் மண்ணை தோண்டி மீட்டனர். அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி னர். மண்ணில் புதைந்ததால் உடல் உறுப்புகள் செய லிழந்து பழையபடி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் தெரி வித்தனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண உதவி தொகை மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்க வில்லை. இதனால், மிகவும் பாதிக்கப்பட்டேன். இது தொடர்பாக, ‘தி இந்து’வில் செய்தி வெளியிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எனது இரண்டாவது மகள் மஞ்சுளாவின் பட்ட படிப்பு மற்றும் மூன்றாவது மகள் யுவயின் கல்வி செல வுத் தொகையான ரூ.55 ஆயிரத்தை தான் ஏற்பதாக கூறினார். மேலும் வீட்டு வாட கைக்கு ரூ.10,500 வழங்கினார். இதுபோக வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நட வடிக்கைகளை துரிதப் படுத்தி, விரைவில் வழங்குவ தாக உறுதி அளித்தார். மாவட்ட ஆட்சியருக்கும் ‘தி இந்து’வுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி யிடம் கேட்டபோது: சுனாமி யால் பாதிக்கப்பட்ட சண்முக வேலுக்கு, மனிதாபிமான முறையில், அவரது மகள் களின் கல்வி செலவை ஏற்றுள் ளேன். மேலும், அவரது மூத்த மகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. சண்முகவேல் தற்போது கானத்துரெட்டி குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வருவாய்த்துறையினர் மூலம் ஆய்வுசெய்து அவருக்கு அதே பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.