மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகுத்துத் தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தற்பொழுதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது என்றும் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க முடியாது என்றும் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மத்திய அரசு ஆக்கபூர்வமான, வலுவான வாதத்தை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை மத்திய அரசு முறையாக, உரிய காலத்தில் செய்யவில்லை.
அதே போல தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் வலுவான அழுத்தத்தையும், வாதத்தையும் வைக்கவில்லை. நாடே போற்றுகின்ற, மதிக்கின்ற உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசு உடனடியாக அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி, கொள்கை முடுவு எடுத்து, அவசர சட்டத்தை கொண்டு வந்து நல்ல அறிவிப்பை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு இந்த ஆண்டே நடைபெற உடனடியாக மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த பொங்கலுக்கு நடைபெற வழிவகுத்துத் தர வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்த அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.