பா.ஜ. மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தனது நிலத்தின் பத்திர நகல்களை வாங்கி வைத்துக்கொண்டு திருப்பித் தர மறுக்கிறார் என்று போலீஸ் கமிஷனரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். சென்னை அடையாறு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளவூர் என்ற இடத்தில் எனக்கும் வேறு சிலருக்கும் சொந்தமாக 164 ஏக்கர் நிலம் உள்ளது. இதை விற்க முயன்ற போது, பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா அந்த நிலத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறி, நிலத்துக்கான பத்திரங்களின் நகல்களை கேட்டார். நகல் களை அவரது உதவியாளர் வாசுதேவனிடம் கொடுத்தேன்.
ஆனால், அந்த நிலத்தை ராஜா வாங்கவில்லை. பத்திர நகல்களை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டேன். திருப்பித் தராமல் என்னை மிரட்டுகின்றனர். அந்த நகல்களை வைத்து போலி பத்திரங்கள் தயார் செய்ய முடியும். எனவே, அவர்களிடம் இருந்து எனது பத்திர நகல்களை வாங்கி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து எச்.ராஜாவிடம் கேட்டபோது, ‘‘பத்திரத்தின் நகல்களை வைத்து நான் என்ன செய்ய முடியும். இது உண்மைக்கு புறம்பான புகார். என் மீது புகார் கொடுத்துள்ளவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.