தமிழகம்

திருப்பூர் தொகுதி யாருக்குன்னு சத்தியமா தெரியலை : விஜயகாந்த்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரி தேமுதிக-வினர் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருப்பூர் தொகுதி குறித்து விஜயகாந்தின் பேச்சு திருப்பூர் தேமுதிக-வினரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் தொகுதிகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசும்போது, இங்கு எந்தக் கட்சி நின்றாலும் நீங்கள் நல்லபடியாக வேலை பார்க்க வேண்டும் என்று தனது பேச்சை தொடங்கினார். இதை திரும்பத் திரும்ப ஆங்காங்கே சொல்லியபடியே பேச்சை தொடர்ந்தார்.

பிரச்சாரத்தின்போது, உங்களைப் போலதான் எனக்கும் சத்தியமா தெரியலை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிதான் தொகுதியை அறிவிப்பார்கள். நான் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணத்தில் இருக்கேன். நமக்குள்ள எந்த சண்டை சச்சரவு இல்லாம இருக்க வேண்டும். என் வேகத்துக்கு ஈடுகொடுத்து நீங்களும் தேர்தலில் வேலை பார்க்கணும் என அன்புக் கட்டளையிட்டார்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு திருப்பூரில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு திருப்பூரில் பாஜக-வினர் சிலர், திருப்பூர் தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக சொல்லி, மங்கலம் சாலையில் வெடி வெடித்தனர்.

ஏற்கெனவே, திருப்பூர் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக-வுக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேமுதிக நிர்வாகிகள் ராஜினாமா, சாலை மறியல், தீக்குளிப்பு, அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, திருப்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பேச்சு, திருப்பூர் தொகுதி தேமுதிக தொண்டர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT