தமிழகம்

ஓராண்டுக்குப் பிறகு பேரவைக்கு வந்தார் கருணாநிதி: வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டார்

செய்திப்பிரிவு

ஓராண்டுக்குப் பிறகு சட்டப்பேரவைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு திரும்பினார்.

திமுக தலைவர் கருணாநிதி, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியில்தான் வெளியில் சென்று வருகிறார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பேரவைக்குள் வருவதற்கு தனக்கு வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி பேரவை நிகழ்ச்சிகளில் கருணாநிதி கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆனால், அவ்வப்போது பேரவைக்கு வந்து அங்குள்ள லாபியில் வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகிறார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை பேரவை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது 10.23 மணிக்கு கோட்டைக்கு வந்தார் கருணாநிதி. அவரை திமுக எம்.எல்.ஏ.க்கள் வரவேற்று சட்டப்பேரவை வளாகத்துக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் கருணாநிதி கையெழுத்திட்டார். பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேரவைக்கு வந்து கையெழுத்திட்டார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு அவர் பேரவைக்கு வந்து கையெழுத்திட்டுள்ளார்.

சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு உறுப்பினர் தொடர்ந்து 60 நாட்களுக்கு பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் போனாலோ அல்லது கையெழுத்திடாமல் இருந்தாலோ அவரது பதவி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த கருணாநிதி, நிருபர்களுக்கு அளித்த

பேட்டி:

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளதே?

அது தவறான வாதம். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

சட்டப்பேரவையில் இருந்து துரைமுருகனை சஸ்பெண்ட் செய்திருப்பது பற்றி?

அது அவை நடவடிக்கைகளில் ஒன்றுதான். வழக்கமாக நடப்பதுதான். ஜனநாயகத்தை தாறுமாறாக நடத்துவதில் இதுவும் ஒன்று. எனவே, அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறதா?

கேள்வி நேரம் இங்கு இல்லை. சட்டசபைக்குள்தான்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

SCROLL FOR NEXT