தமிழகம்

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம்

செய்திப்பிரிவு

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்ததால் தி.மு.க.வினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்கின்றனர் என இரண்டாவது நாள் பிரச்சாரத்தில் எம்.பி. கனிமொழி பேசினார்.

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெ.மாறனை ஆதரித்து எம்.பி. கனிமொழி, இரண்டாவது நாளாக ஞாயிற்றுகிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏற்காடு காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் மேற்கொண்டுவரும் பிரச்சாரம் மற்றும் மக்களிடம் உள்ள ஆதரவைப் பார்த்து ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் காவல்துறையினரைக் கொண்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள அடிப்படைத் தொண்டர்கூட அஞ்சமாட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றம் வேண்டும் என்று எண்ணி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை அ.தி.மு.க. அரசு அளித்துள்ளது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மக்கள் மீது கடுமையான வரியை சுமத்தி அவர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திரா மட்டுமல்லாமல் மற்றமாநிலங்களில் இருந்த கொள்ளையர்கள் கொலைக்காரர்கள் என அனைவரும் தமிழகத்தில் வந்து தங்கி உள்ளனர். இதனால், பெண்கள் பகலில்கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவரும் இந்த அ.தி.மு.க. அரசு, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தே.மு.தி.க மற்றும் பா.ம.க என அனைவரின் மீதும் வழக்கு தொடர்ந்து அவர்களைப் பழிவாங்குகிறது.

பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்து விலைகளையும் உயர்த்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினருக்கு பாடம் புகட்ட, ஏற்காடு தொகுதி மக்கள் தயாராக வேண்டும். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி, தமிழகத்தில் உள்ள மற்ற கட்சியினருக்கு கிடைக்கும் வெற்றியாகும் என்றார்.

SCROLL FOR NEXT