அண்மையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த இருவரது குடும்பத்துக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்கிற பழனிசாமி 27.10.2014 அன்று நஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் வயலில் நீர்பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது மின் இணைப்புக்குச் செல்லும் மின்பாதையில் உயர்மின் அழுத்த மின்கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமம், குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் 27.10.2014 அன்று தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகிலிருந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் கசிந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் செய்தியறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.