சிறப்பு நிபுணர் குழு அமைத்து தனியார் பால் மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 70 தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பசு, எருமை பாலில் இருந்து இயந்திரங்கள் மூலம் வெண்ணெய், கொழுப்பு தனியே பிரிக்கப்பட்டு, பல்வேறு வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டு பால், பால் பொருட்களை உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு, ரத்த அழுத்தம் தீவிர நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். ஆவின் தவிர பிற தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சரே பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சுமார் 7 கோடி பேர் தினமும் பால் பருகும் நிலையில் தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக அமைச்சரே குற்றம்சாட்டிய போதிலும் இதுவரை தனியார் பால், பால் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
எனவே, சிறப்பு நிபுணர் குழு அமைத்து தனியார் பால் மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். அதுவரை தனியார் பால் விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, இதே கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். இதையடுத்து இந்த மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.