தமிழகம்

கேரளம் செல்லும் வழியில் கோவை அருகே நகைக் கடை ஊழியர்கள் காருடன் கடத்தல்: கோடிக்கணக்கில் பணத்துடன் மாயம்?

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற காரை, கோவை அருகே சீருடை அணிந்துவந்த சிலர் போலீஸார் எனக் கூறி கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர்சதா. அங்கு தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணிபுரியும் முகமது, முசீர், ஆனந்த், சீதோஷ் ஆகியோர் தொழில் நிமித்தமாக சென்னை சென்றுவிட்டு நேற்று காலை மலப்புரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோவை ஈச்சனாரி அருகே இவர் களது காரை, மற்றொரு காரில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர். அதில், போலீஸ் உடையுடன் இருந்த 3 பேர் உட்பட 5 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து முகமது, முசீர், ஆனந்த், சீதோஷ் ஆகிய 4 பேரையும் போலீஸ் உடையில் வந்தவர்கள் அவர்களது காரில் ஏற்றிக்கொண்டனர். பின்னர், முகமது உட்பட 4 பேர் வந்த காருடன் வழிப்பறி செய்தவர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதற் கிடையில், சிறிது தூரம் சென்றவுடன் 4 பேரையும் மிரட்டி இறக்கிவிட்டு, காருடன் அவர்கள் சென்றுவிட்டதாக மதுக்கரை போலீஸில் முகமது அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காரில் இருந்த சில கோடி ரூபாய் ரொக்கத்துடன் போலீஸ் உடையில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக பரவிய தகவலில் உண்மை இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரில் பணம் கொள்ளை போனதாக தகவல் தெரிவிக்கவில்லை. தங்களது காரை மீட்டுத் தருமாறு மட்டும் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT