தமிழகம்

விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.5,780 கோடி தள்ளுபடி: பயனாளிகள் விவரம் இணையதளத்தில் வெளியீடு - ஆட்சேபம் தெரிவிக்க 2 வாரம் அவகாசம்

கி.கணேஷ்

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன் பெற்ற சிறு, குறு விவசாயிகள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. இதில் ஆட்சேபம் ஏதும் இருந்தால் 2 வாரத்துக்குள் தெரிவிக்க லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா கடந்த மே 23-ம் தேதி பதவி ஏற்றார். அதிமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பதவியேற்ற அன்றே சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் இத்திட்டம் தொடர்பான அரசாணையும், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஜூலை 21-ம் தேதி சட்டப்பேரவையில் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அப்போது ‘விவசாயிகளின் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் மற்றும் வட்டி உள்ளிட்ட மொத்தத் தொகை ரூ.5,780 கோடி. இந்தத் தொகை திரும்ப செலுத்தப்படும் வரையுள்ள வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசால் செலுத்தப்படும். இந்த தள்ளு படியால் 8 லட்சத்து 35 ஆயிரத்து 360 குறு விவசாயிகளும் 8 லட்சத்து 58 ஆயிரத்து 785 சிறு விவசாயிகளும் பயன் பெறுவர். பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ.1,680.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன் பெற்ற பயனாளிகள் விவரம் சேகரிக்கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், மாவட்ட அலுவலர்களைக் கொண்ட குழு, பயனாளிகள் பட்டி யலை ஆய்வு செய்தது. இப்பணிகள் கடந்த மாதம் இறுதியில் முடிந்தன. இதையடுத்து, பயனாளிகள் பட்டியல் கூட்டுறவுத்துறை இணையதளம், கூட்டுறவு சங்க அலுவலகங்கள், வங்கி களில் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான பயனாளிகள் பட்டியல், ஆகஸ்ட் 30-ம் தேதி ‘tncu.tn.gov.in’ என்ற கூட்டுறவு சங்கங்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்தந்த கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இணையதளத்தில் உள்ள பட்டியலில் கடனின் தன்மை, உறுப்பினர் பெயர், கடன் எதற்காக வாங்கப்பட்டது, நிலம், கடன் தொகை, வட்டி, மொத்த தொகை உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க 2 வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பெயர் விடுபட்டதாக பல கோரிக்கைகள் வந்து கொண்டிருக் கின்றன. அவை ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. வழிகாட்டு நெறிமுறை களின்படி விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்துக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அதாவது முறைகேடுகள் செய்து வங்கிக்கடன் பெற்றிருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்யப்பட்டு பெயர் நீக்கப்படும். அதேநேரம், வங்கிக்கடன் வழங்கப்பட்ட பிறகு நில அளவில் உயர்வோ, தாழ்வோ இருந்தால் அது கணக்கில் கொள்ளப்படாது.

விவசாயிகளுக்கு ஆட்சேபம் இருந்தால் 2 வாரங்களுக்குள் கூட்டுறவு துணைப் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிப்பார். அந்த உத்தரவில் ஆட்சேபம் இருந்தால் மண்டல இணைப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இறுதி பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடியும்.

மேலும், இந்த கடனை காரணம் காட்டி புதிய கடன் வழங்குவது நிறுத்தப்படாது. தொடர்ந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. பழைய கடன் தொகையில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை கணக்கிட்டு பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT