எழும்பூர் எத்திராஜ் சாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடந்துள்ளது.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மையம் உள்ளது. இதில் ஒரே அறையில் 3 ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. புதன்கிழமை இரவு 1.30 மணியளவில் எழும்பூர் ரோந்து காவலர் ரவீந்திரன் அந்த பகுதிக்கு ரோந்து சென்றார். ரோந்து செல்லும் போலீஸார் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள ரோந்து புத்தகத்தில் கையெழுத்து போட வேண்டும். இந்த ஏடிஎம் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ரோந்து புத்தகத்தில் கையெழுத்திட காவலர் ரவீந்திரன் ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது ஒரு இயந்திரத்தின் பணம் வைக்கும் இடம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது அங்கும் இங்கும் சுற்றிவிட்டு நின்றுவிட்டது. இந்த ஏடிஎம் மையத்துக்கு காவலாளிகள் கிடையாது. ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம் உறுதியாக இருந்ததால் அதை திருடர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் பணம் எதுவும் திருடப்படவில்லை.
ஏடிஎம் மையங்களுக்கு கண்டிப் பாக காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்று சென்னை காவல் துறை அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஆயிரக்கணக்கான ஏடிஎம் மையங்கள் காவலாளிகள் இல்லாமல் உள்ளன.