போதையில் கார் ஓட்டி ஒருவர் இறக்கக் காரணமான இளம்பெண் ஐஸ்வர்யாவுக்கு 42 நாட்களுக்குப் பிறகு நேற்று உயர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சேத்துப்பட்டைச் சேர்ந்த இளம் பெண் ஐஸ்வர்யா வில்டன்(23). கடந்த ஜூலை 1-ம் தேதி அதிகாலை இவர் மது போதையில் தனது விலை உயர்ந்த ஆடி காரை பழைய மகாபலிபுரம் சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த கார் கூலித் தொழிலாளி முனுசாமி மீது மோதியது. இதில் சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார். இதையடுத்து கிண்டி போக்குவரத்து போலீ ஸார் ஐஸ்வர்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடந்த 42 நாட்களாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐஸ்வர்யா தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் 3 முறையும், மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு முறையும் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சொக்கலிங்கம், நேற்று ஐஸ்வர்யாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தார்.
சிறையில் 42 நாட்கள்..
நீதிபதி தனது உத்தரவில், ‘‘ஐஸ்வர்யா மீதான போலீஸ் விசாரணை முடிவடைந்துவிட்டது. ரசாயன பரிசோதனை முடிவு கள் மட்டுமே இன்னும் வர வேண்டி யுள்ளது. இந்த வழக்கில் அவர் கடந்த 42 நாட்களாக சிறைக்குள் இருந்து வருகிறார். எனவே அதைக் கவனத்தில்கொண்டு அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. ஐஸ் வர்யா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் பிணை உத்தரவாதத்தை சைதாப்பேட்டை 18-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செலுத்தி ஜாமீன் பெறலாம்.
அதுபோல மேலும் ரூ.1 லட்சத்தை அவர் அதே நீதிமன் றத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும். அந்தத் தொகையை முனுசாமியின் குடும்பத்தினர் தகுந்த ஆவணங்களைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம். தவிர, ஐஸ்வர்யா 2 வாரங்களுக்கு காலை 10.30 மணிக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண் டும். மறு உத்தரவு வரும் வரை அவர் சென்னையை விட்டு வெளியூர் செல்லக்கூடாது’’ என உத்தரவிட்டுள்ளார்.